துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ மேஜர் பீனா திவாரி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கக்த்தில் பகிர்ந்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும் வண்ணம் இந்த அவசர கால நிவாரண குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஆப்ரேஷன் தோஸ்த் என்று பெயர் வைத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ஜார்க்கண்ட் ஆளுநராக வரும் 18-ம் தேதி பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்நிலையில் துருக்கி சென்றுள்ள இந்திய மீட்பு படையில் மேஜர் பீனா திவாரி ஒரே பெண் மருத்துவ அதிகாரி ஆவார். 99 மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழு துருக்கி சென்றுள்ளது. இவர் துருக்கியில் மீட்கப்பட்ட பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ”இது இந்தியாவின் சர்வதேச புகைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய ராணுவம் உலகிலேயே மிகப் பெரிய ராணுவம் என்றும் மீட்பு பணியில் அவர்களுக்கு மிகப் பெரிய அனுபவம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.







