செய்திகள்

அசாம் வனப்பகுதியில் 18 யானைகள் உயிரிழப்பு: மின்னல் தாக்கியதா?

அசாம் மாநிலத்தில் ஒரே நேரத்தில் 18 யானைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்ட கத்தியடோலி வனச்சரகத்தில் 18 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நான்கு யானைகளின் உடல்களின் ஒரு பகுதியிலும் 14 யானைகளின் உடல்கள் ஒரு குன்றின் அருகிலும் கிடந்துள்ளன.

இதுபற்றி வனத்துறை தலைமை வார்டன் அமித் சஹே கூறும்போது, இந்த யானைகள் மின்னல் தாக்கியதில் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்றார். யானைகள் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

’இந்த சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. வியாழக்கிழமை காலை வன அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து அவர்களும் கால்நடை மருத்துவர்களும் அங்கு சென்றனர்’ என்று இணை கமிஷனர் கவிதா பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

’முதற்கட்ட விசாரணையில் மின்னல் தாக்கி, யானைகள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் குட்டி யானைகளும் அடக்கம். உடற்கூராய்வுக்குப் பிறகே சரியான காரணம் தெரிய வரும். உயிரிழந்த யானைகளின் உடல்களை சேகரித்து வருகிறோம் என்று வன அதிகாரி வசந்தன் தெரிவித்துள்ளார்.

மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்த சம்பவத்துக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். வனத்துறை அமைச்சரை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ள அவர் அதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

ஒரே நேரத்தில் இத்தனை யானைகள் இறந்திருப்பது அதிர்ச்சியானது என்று தெரிவித்துள்ள வனவிலங்கு ஆர்வலர்கள், இதற்கு பின் வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பிரபல யானை நிபுணரும் கவுகாத்தி வனவிலங்கு தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரியுமான பிபாப் தலுக்டர் கூறும்போது, இந்த யானைகள் உயிரிழக்க மின்னல் தான் காரணம் என சந்தேகித்தாலும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதையும் நிராகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதற்கு பின்னால் உள்ள சரியான காரணத்தை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Halley karthi

ஆறு தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியீடு!

Halley karthi

ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியாவின் இளம்படை; ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை!

Saravana