தந்தை பெரியாருக்கு திருச்சி அருகே சிறுகனூரில் 155 அடி உயரத்தில் பிரம்மாண்ட உருவச் சிலை அமைப்பதற்கும், 60 கோடி ரூபாயில் பெரியார் உலகம் அமைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
திருச்சி திண்டிவனம் நெடுஞ்சாலையில் சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 60
கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் உலகம் எனும் ஆய்வு மற்றும் பெரியாரிய பயிலகம்
அமையவுள்ளது. மூன்று கட்டங்களாக அமைக்கப்படும் இந்த பெரியார் உலகத்தில்
முதல்கட்டமாக 9 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுமானங்கள் நடைபெற உள்ளன. இதில்
பெரியாரின் 95 வயதை குறிக்கும் வகையில் 60 அடி உயர பீடத்தில் 95 அடி முழு
உருவச் சிலை மொத்தம் 155 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த சிலை புயல், மழை, நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை தாங்கும்
வகையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் உலக பொறியாளர்கள் ஆலோசனைப்படி அமைக்கப்பட உள்ளது. பெரியாரின் உருவத்தை அப்படியே அமைக்க நவீன தொழில்நுட்பமான Digital Sculpture முறையில் அமைக்கப்பட உள்ளது. 155 அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்த சிலை 350 கி.மீ வேகத்தில் புயல் காற்று
வீசினாலும் தாங்கி நிற்கும் வகையிலும், ரிக்டர் அளவுகளில் 10 என்ற அளவில் நில
நடுக்கம் ஏற்பட்டாலும் தாங்கும் வகையிலும் அமைக்கப்பட உள்ளது.
இந்த சிலை உள்ளிட்ட முதற்கட்ட கட்டுமானத்திற்கான அடிக்கல்லை காணொளி வாயிலாக இன்று முதலமைச்சர் நாட்டினார். அதைத்தொடர்ந்து, திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி பேசுகையில், தமிழகத்திற்கு மட்டும் விடியல் அல்ல, பெரியார் உலகத்திற்கும் விடியலை ஏற்படுத்தி தந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின். பெரியார் உலகம் கட்டடத்திற்கு நீங்கள் அடிக்கல் நாட்டவில்லை, ஒரு உலகத்திற்கு
அடிக்கல் நாட்டி உள்ளீர்கள். இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் மட்டுமல்ல, அடிக்கல்லாகவும் நீங்கள் இருக்கிறீர்கள் (முதலமைச்சர்).
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை கருணாநிதி தொடங்கிவைத்தார் அன்று. இன்று பெரியார் உலகத்தை நீங்கள் தொடங்கி வைக்கிறீர்கள். அடுத்த மாமல்லபுரம் போல், திருச்சி மாறும், வால்ட் டிஸ்னி போன்ற அமைப்புகள் பெரியார் உலகத்தில் இருக்கும். பெரியார் உலகத்தை அமைக்க பிச்சை எடுப்போம், துண்டை விரிப்போம். எங்களுக்கு அதில் எந்த கூச்சமுமோ, அச்சமோ கிடையாது. இதனை அமைக்க 60 கோடி நிதி தேவை, இதுவரை 8 கோடி நிதி கிடைத்துள்ளது. 6 ஆண்டுகளுக்குள் இதை முடிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே இதனை துவக்கி வைப்பது மட்டுமின்றி, முடித்து வைப்பதும் உங்கள் (முதலமைச்சர்) பொறுப்பு. இந்த ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றம் மட்டுமல்ல சமுதாய மாற்றம் இது என்றார்.
-ம.பவித்ரா








