இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சென்னை வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மத்திய மாநில அரசுகளின் பேச்சு வார்த்தைக்கு பின் இலங்கை அரசு 14 மீனவர்களையும் விடுதலை செய்தது. இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்கள் அனைவரையும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 14 மீனவர்களுக்கு இந்திய தூதரக வாயிலாக சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள் அனைவரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு தனி வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.