தொடங்கியது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 3-ஆம்…

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

3 ஆயிரத்து 225 தேர்வு மையங்களில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தனித் தேர்வர்களுடன் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர். 46 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகரில் 180 தேர்வு மையங்களில், மொத்தம் 45 ஆயிரத்து 982 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரியிலும் 40 மையங்களில் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 23 ஆயிரத்து 747 தனித்தேர்வர்களும், 6 மாற்றுத் திறனாளிகளும், 90 சிறைக்கைதிகளும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மலர்தூவி ஆசி வழங்கி தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பு மாணவ, மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து, பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ஆம் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மூவாயிரத்து 224 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதவுள்ளனர். இவர்களில் ஐயாயிரத்து 338 தனித் தேர்வர்களும் 4 மூன்றாம் பாலினத்தவர்களும் 125 சிறைக்கைதிகளும் அடங்குவார்கள்.

மேலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.