பீகாரில் வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம் – முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு !

பீகாரில் வீடுகளுக்கு மாதந்தோறும் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளது. இதனால் பீகார் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மாதந்தோறும் 125 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது  எக்ஸ் தள பக்கத்தில், ”பீகார் மக்களுக்கு தொடக்கத்தில் இருந்தே குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கி வருகிறோம். இந்த நிலையில், வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். அதன்படி ஜூலை மாத மின் கட்டணத்தில் நுகர்வோர்கள் 125 யூனிட் வரையிலான மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பயனடையும்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ”அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வீடுகளிலும் அவரவர் விருப்பத்தை பெற்றுக் கொண்டு சோலார் பேனல்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பொது இடங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவி அதன் மூலம் மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் அரசு ‘குதிர் ஜோதி யோஜனா’ திட்டத்தின் கீழ் மிகவும் ஏழ்மையான குடும்பங்களின் வீடுகளில் சோலார் பேனல்களை அமைப்பதற்கான மொத்த செலவையும் ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளது. 125 யூனிட் இலவச மின்சாரம் மட்டுமின்றி, அடுத்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி கிடைக்கும் என்றும் நிதிஷ் குமார் கூறியுள்ளார

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.