124 வது மலர் கண்காட்சி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உதகையில் 124-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124து மலர்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (20ம் தேதி)…

உதகையில் 124-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124து மலர்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (20ம் தேதி) துவங்கி 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மலர் கண்காட்சியை இன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். மலர் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்தார்.

மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளைக் கொண்ட ஐந்து லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. இதில் மேரி கோல்ட், பிரஞ்ச் மேரி கோல்ட், பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா உட்பட 275 ராகங்களில் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

35 ஆயிரம் தொட்டிகளில் பல வண்ண மலர்கள் காட்சி மடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல ஆயிரம் தொட்டிகள் புது பூங்காவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மலர்கண்காட்சியையொட்டி பல வண்ணங்களில் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு கோவை வேளாண் பல்கலைக்கழக கட்டிடத்தின் முகப்பு தோற்றம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூரு, ஓசூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவை மலர் விவசாயிகளிடமிருந்து மலர்கள் வாங்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர், கொத்தர், பணியர், இருளர், முள்ளு குறும்பர், காட்டு நாயக்கர் போன்ற பழங்குடியினர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருளர், குறும்பர், பணியர், தோடர், கொத்தர், முள்ளு குறும்பர் என ஆறு பழங்குடியின மக்களின் உருவங்கள் 15 ஆயிரம் கொய் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை கவரும் வகையில் பலவகையான கார்டூன் வடிவங்கள், காய்கறிகளைக் கொண்டு வன விலங்குகள் போன்ற வடிவம் அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 6000 மஞ்சள்நிற கார்னேஷன் மலர்களை கொண்டு மஞ்சப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.