முக்கியச் செய்திகள் இந்தியா

12 எம்.பிக்கள் சஸ்பென்ட்; முதலமைச்சர் கடும் கண்டனம்

12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் மதிமுக சார்பில் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையில் உள்ள சேத விவரங்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும், குளிர்கால கூட்டத்தொடரில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதோடு, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், குடியுரிமை சட்டம் தொடர்பாக அவையில் பேச நேரம் ஒதுக்க கோரிக்கை விடுத்ததாகவும் டி.ஆர்.பாலு குறிப்பிட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.
அப்போது, வேளாண் சட்டங்கள் குறித்தும், அதற்கு பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாமல், மசோதா நிறைவேற்றப்பட்டதால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, 12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனவும், எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற திமுக வலியுறுத்துவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

திரைப்படங்கள் ஓ.டி.டி-யில் வெளியாவதால் இசைத் தரம் குறைவதில்லை: சந்தோஷ் நாராயணன்

Vandhana

ஆர்யன் கானுக்கு கிடைக்குமா ஜாமீன்? இன்றும் தொடர்கிறது விசாரணை

Halley Karthik

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 3,640 சிறப்பு பேருந்துகள்

Halley Karthik