அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 118 லிட்டர் தாய்ப்பாலை விற்பனை செய்துள்ள சுவாரசிய செய்தி வெளியாகியுள்ளது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் சிறந்தது. நமது நாட்டைப் பொருத்தவரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.
இதனால், குழந்தைகளுக்கான பால் பவுடர் விற்பனை இந்த நாடுகளில் ஜோராக நடக்கும். எனினும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பச்சிளங் குழந்தைகளுக்கான உணவு உற்பத்தியில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒரு அறிக்கையின்படி, குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களுக்கு அமெரிக்காவில் 40 சதவீத தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. பால் பவுடர், சிறிதளவு தண்ணீர் கலந்து கொடுக்க பயன்படும் திரவ உணவு ஆகியவற்றை அமெரிக்க பெற்றோர்கள் பெரிய அளவில் சார்ந்திருக்கின்றனர்.
இந்நிலையில், குழந்தைகளுக்கான உணவுப் பொருள் தட்டுப்பாடு, பெற்றோர் மத்தியில் மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசாதாரணமான சூழலில், பெற்றோர்களுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்காவின் உடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 118 லிட்டர் தாய்ப்பாலை விற்பனை செய்துள்ளார்.
ஒரு அவுன்ஸ் தாய்ப்பாலை 1 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்வதாக அந்தப் பெண் தெரிவித்தார். அதேநேரம், விலை குறித்து குழந்தைகளின் பெற்றோருடன் விவாதிக்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.







