போட் (BOAT) நிறுவனத்தின் ஒருநாள் சிஇஓ-ஆன பார்வை குறைபாடுள்ள 11 வயது சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த பிரதமேஷ் சின்ஹா கண் பார்வை குறைபாடு கொண்டவர். 11 வயது சிறுவனான இவர் பார்வை இல்லாதவர்கள் கல்வி கற்கும் நோக்கில், ‘Annie’ எனும் புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இந்தக் கருவியை கண்டுபிடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமானவர் பிரதமேஷ்.
புதிய நிறுவனங்களை உருவாக்கும் நபர்கள் தனக்கு உத்வேகம் அளிப்பதாகக் கூறும் பிரதமேஷுக்கு IAS ஆக வேண்டும் என்பதுதான் கனவு. இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 57,000 பேர் பின்தொடர்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் தன்னை விரும்புகின்றனர் என மகிழ்ச்சியோடு கூறுகிறார் பிரதமேஷ்.
https://www.instagram.com/tv/CdBetGNNKXe/?igshid=YmMyMTA2M2Y=
இந்நிலையில், இவரை ஒருநாள் சிஇஓ-வாக நியமித்திருக்கிறது போட் நிறுவனம். போட் நிறுவனத்தின் இணை நிறுவனரான அமன் குப்தா, பிரதமேஷ் சின்ஹாவுக்கு சிறப்பு அழைப்பு ஒன்றை கொடுத்திருக்கிறார். இதையடுத்து, போட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற பிரதமேஷை ஊழியர்களுக்கு அமன் குப்தா அறிமுகம் செய்துவைத்தார். அதன் பின்னர், ஒரு நாள் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பிரதமேஷை நிர்ணயிப்பதாக அவர் கூற ஊழியர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
போட் நிறுவனர் அமன் குப்தா, பிரதமேஷ் உடனான உரையாடலை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “கோடிக்கணக்கான முகங்களில் புன்னகையை வரவழைத்தவரைக் கொண்டாடுகிறோம். அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்கும் எங்கள் முயற்சிகளில் எங்களுடன் இணைந்திடுங்கள். தரமான கல்வியைப் பெற அவர் தகுதியுடையவர். அதற்காக அவருக்கு அளிக்கும் ஒருவித உதவியே இந்த முயற்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமேஷ் உருக்கமாகப் பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. போட் நிறுவனத்தின் ஒருநாள் சிஇஓ-ஆக பிரதமேஷை நியமிக்கப்பட்டதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.








