ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள பேரறிவாளன், மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனை, கடந்த மே 18-ஆம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து பேரறிவாளன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், நீண்ட நாட்கள் போரட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்தார். தொடர்ந்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தபட்ட மற்ற 6 பேருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்று நினைகிறீர்களா என செய்தியாளர் கேட்டபோது, ஆம், தற்போது சிறையில் உள்ள 6 பேரும் விடுதலை ஆக வேண்டும் என தெரிவித்தார்.
எதிர்காலம் குறித்த திட்டம் என்ன என்று செய்தியாளர் கேட்டபோது, நான் தற்போதுதான், 31 ஆண்டுகளுக்கு பிறகு வெளியில் வந்திருக்கிறேன். என் குடும்ப உறவினர்கள், நண்பர்களுடன் கலந்து பேசி விரைவில் முடிவு எடுப்பேன் என பேரறிவாளன் கூறினார். தொடர்ந்து, திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய போது, சிரித்து கொண்டே பார்க்கலாம் என தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘போட் நிறுவனத்தின் ஒருநாள் சிஇஓ-ஆன பார்வை குறைபாடுள்ள சிறுவன்’
தமிழ்நாடு சட்டமன்றத்தில், விடுதலை தொடர்பாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நீண்ட கால தாமதம் நடந்துள்ளதே என கேட்டபோது, அதுகுறித்து பதிலளிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். அப்போது, உங்களின் ரோல் மாடல் யார் என கேட்டபோது, அனைவருமே என் ரோல் மாடல் தான். ஆனாலும், திருவள்ளுவர் கடினமான சூழ்நிலையில் உறுதியை தந்தார் என தெரிவித்த அவர், அம்மா இல்லாமல் நான் இல்லை எனவும், என் முழு சக்தியுமே அம்மா தான் என நெகிழ்ச்சி பட கூறினார்.
சிறையில் பல தரப்பு மனிதர்களை சந்தித்து இருப்பீர்கள், அதில் உங்களுக்கு பிடித்தவர்கள் யார் என கேட்ட போது, நான் காவல்துறை அதிகாரிகள், காவலர்களுடன் மட்டுமே அதிக அளவில் பேசியதால் விரும்பியவர்கள் என யாரும் இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து, ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என செய்தியாளர் கேட்டபோது, “நான் பாதிக்கப்பட்டவன்” என பேரறிவாளன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








