இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக சிஹான்ஜிவாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
உலகில் இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருந்து வருகிறது. இங்கு மேற்கு ஜாவா உள்ளிட்ட பல மாகாணாங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் ஜாவாவில் சுமேடங் மாவட்டத்தில் உள்ள சிஹான்ஜிவாங் கிராமத்தில் நேற்று கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த கிராமத்தில் இருந்த பல வீடுகள் மண்ணில் புதைந்தன.
இதனை அடுத்து அங்கு வந்த மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 வயது குழந்தை உட்பட பலர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் சாலைகள், பாலங்களில் சேதமடைந்துள்ளதால் மீட்புப்பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது.







