சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 10 பேர் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட மொத்தம் 11பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 10 பேர் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட மொத்தம் 11பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான 10 பாதுகாப்பு படை வீரர்களும் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் எனும் (DRG) பிரிவை சேர்ந்தவர்கள். மேலும் பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை ஓட்டிய டிரைவர் ஒருவரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அதிகமாக செயல்படுகின்றனர். சட்ட விரோதமாக ஆயுதமேந்தி போராடும் நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கு சிறப்பு படைகளை நியமித்து அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் அரன்பூரில் வழக்கம்போல நக்சலைட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க 10 மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரோந்து பணி முடிந்து சாலை மார்க்கமாக திரும்பும்போது நக்சலைட்டுகள் சாலையின் நடுவே பதுக்கி வைத்திருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த தாக்குதல் 10 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அவர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் ஓட்டுநர் உட்பட 11பேர் பலியாகினர். நக்சலைட்டுகளின் தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் நடத்திய கொடூர தாக்குதல் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்ட அறிக்கையில் ” நக்சலைட்டுகளுக்கு எதிரான அரசின் போராட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது. திட்டமிட்ட முறையில் நக்சலிசம் வேரறுக்கப்படும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது ” என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலிடம் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இதில் நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1651185007694868481
இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
“தண்டேவாடாவில் நடைபெற்றுள்ள தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் என்றும் நினைவுகூரப்படும். உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.







