அரசுப் பேருந்துகளில் தொலைதூர நகரங்களுக்குச் சென்று வர (( Up and down)) ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டணச் சலுகை அமலுக்கு வந்துள்ளது.
விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன மிதவைப்பேருந்து, குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்ந்து, மொத்தம் 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
300 கி.மீ.க்கும் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம்ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம், ஒரு மாதத்துக்கு முன்பே பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், பயணிகள் நீண்ட தொலைவுப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிப்போரை ஈர்க்கவும், விழா நாட்கள் நீங்கலாக, இதர நாட்களில் இணையவழி மூலமாக இருவழிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடிவழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆன்லைன் பதிவு மூலம் குறிப்பிட்ட நகரத்திலிருந்து புறப்பட்டு அதே இடத்திற்கு திரும்பும் பயணிகளுக்கு மட்டுமே இந்த கட்டணச் சலுகை பொருந்தும்.
குறிப்பிட்ட நகரத்திற்கு செல்வதற்கு மட்டும் பதிவு செய்தால் கட்டணச் சலுகை கிடையாது. உதாரணத்திற்கு சென்னை – நெல்லைக்கு முன்பதிவு செய்தால் 10 சதவீத சலுகை கிடைக்காது. சென்னை – நெல்லை , நெல்லை – சென்னை என up and down க்கு சேர்த்து பதிவு செய்தால் மட்டுமே 10 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும்.
மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சலுகை கட்டணத்தில் பயணிப்போருக்கும், பண்டிகை கால சிறப்பு பேருந்துகளுக்கும் இந்த 10 சதவீத கட்டணக் குறைவு சலுகை பொருந்தாது. வழக்கமான நாட்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவிற்கு மட்டுமே பொருந்தும்.
-ம.பவித்ரா