மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(46). இவருடைய கணவர் முருகன்…

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(46). இவருடைய கணவர் முருகன் என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 2 பெண் பிள்ளைகளுடன் கலைச்செல்வி கூலி வேளை செய்து 2 பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கலைச்செல்வி கடந்த 1-ம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்துச் சென்ற போது பின்பக்கம் வந்த இருசக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மூளைச்சாவு அடைந்துள்ளார். இவரது இதயம் உட்பட உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.

இதற்கான அறுவை சிகிச்சை அதே மருத்துவமனையில் நடைபெற்றது. இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல், இரண்டு கண்கள் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கும்,அனுப்பி வைக்கப்பட்டது.

மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதல்முறையாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உடல் உறுப்புகள் மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.