சாதி பாகுபாடு காரணமாக தினமும் 150 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் செல்லும் அரசுப் பள்ளி ஆசிரியரின் அவலநிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள சத்ரியாலா கிராமத்தை சேர்ந்தவர் கன்ஹையா லால். அரசு பள்ளி ஆசிரியரான அவர், அண்மையில் அதே மாவட்டத்தில் உள்ள நினாமா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கன்ஹையா லால் பட்டியலின வகுப்பைச் சேர்ந்ததால், நினாமா கிராமத்தில் அவருக்கு வீடு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், சத்ரியாலா கிராமத்தில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நினாமா கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு தினமும் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர், கல்வித்துறை, சமூக நீதி உள்ளிட்ட துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை அடுத்து சாதிய பாகுபாடு காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர் கன்ஹையா லால் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி கல்வித்துறைக்கு, சமூக நீதித்துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும், கன்ஹையா லாலை இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கல்வித்துறைக்கு வலியுறுத்தியுள்ளது. சாதிய பாகுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிக்கு ஆசிரியருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







