கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொடர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பயிற்சி நிலையங்கள் (Training and coaching centres) செயல்பட தடை விதிக்கப்பட்டன. அதேபோல மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பிப்.15ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்களின் கோரிக்கை அடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.








