ஸ்மார்ட்ஃபோன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ள உலக சுகாதார அமைப்பு, துரிதமாக வைரஸ் பரிசோதனை செய்வதற்கான தொழில்நுட்ப வழிகளையும் ஆராய்ந்து அதனை ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில் பிசிஆர் கொரோனா பரிசோதனையை ஸ்மார்ஃபோன் மூலம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக செல் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, புதிதாக ஸ்மார்ட்ஃபோன் மூலம் செய்யப்படும் இந்த கொரோனா பரிசோதனை பாசிடிவ், நெகடிவை மட்டும் ஆராயாமல் உடலில் வைரஸின் அளவு மற்றும் வளர்ச்சி தொடர்பாகவும் ஆராய்கிறது. இது தொடர்பாக தெரிவித்துள்ள அமெரிக்காவின் கிளாட்ஸ்டோன் நிறுவனங்களின் மூத்த புலனாய்வாளர் ஜெனிபர் லவுட்னா,
இன்றுவரை அனைத்து பிசிஆர் கொரோனா பரிசோதனையில் வைரஸ் ஆர்.என்.ஏவை கண்டறிய டி.என்.ஏவாக மாற்ற வேண்டும் மற்றும் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அதனை பெருக்க வேண்டும், இது நேரத்தையும் சிக்கலையும் அதிகரிக்கிறது. ஆனால் தற்போது ஸ்மார்ட்ஃபோன் மூலம் இயக்கப்படும் இந்த கருவி மூலம் இதர நடவடிக்கைகள் இன்றி வைரஸ் ஆர்.என்.ஏவை நேரடியாகக் கண்டறிய CRISPR ஐப் பயன்படுத்துகிறது என தெரிவித்தார்.
ஸ்மார்ட்ஃபோனில் இணைக்கப்படும் இந்த புதிய கொரோனா பரிசோதனை கருவி பரிசோதனையின் போது SARS-CoV-2 இருந்தால் அதனை சமிங்கை மூலம் வெளியேற்றும். இதற்கு ஸ்மார்ட்ஃபோனின் கேமரா, நுண்ணோக்கியாக மாற்றப்படுவதால், வைரஸின் ஒளிரும் தன்மையைக் கண்டறிந்து பாதிப்பை உறுதிபடுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் மாதிரிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் தங்கள் சாதனத்தை சோதித்தபோது, மருத்துவ ரீதியாக மற்ற கொரோனா பரிசோதனை முறையை காட்டிலும் இந்த புதிய முறை முடிவுகளை மிக விரைவான நேரத்தில் வழங்கியது. இந்த சாதனம் மூலம் ஒருவருக்கு வைரஸ் உள்ளாதா இல்லையா என்பதை கண்டறிய 30 நிமிடங்கள் போதும் என தெரிவித்தார்.







