இத்தாலியின் வெனிஸ் நகரம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கனமழை ஏற்படும் போது இப்பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதனால் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக நவீன வெள்ளத் தடுப்பு சாதனங்கள் சமீபத்தில் பொருத்தப்பட்டன. ஆனால் அவை சரிவர செயல்பட தவறிவிட்டதால், அந்நகரம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அங்கு பெய்த கனமழை மற்றும் ராட்சத அலைகள் காரணமாக நகரம் முழுவதும் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பு உடைகள் அணிந்து வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் குறையாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் காரணமாக நகரம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிவாரண பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ள தடுப்பு சாதனங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சாதனங்களை உரிய நேரத்தில் இயக்க தவறியது இந்த நிலைமைக்கு காரணம் என கூறப்படுகிறது.







