ஒரு நாளைக்கு நான்கு முறை குளிக்க வேண்டி உள்ளது, தயிர் சாதம் தான் சாப்பிட
தோன்றுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது என சென்னை வாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் எங்காவது வெளியில் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அதிகப்படியான வெயிலால் வெளியில் செல்ல யோசிக்க வேண்டி உள்ளது. குழந்தைகளுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் தண்ணீர் , ஜூஸ்
உள்ளிட்டவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், எப்போதும் வெளியில் செல்லும்
போது தண்ணீர் பாட்டில், குடை வைத்துக் கொள்வது நல்லது, என்று திருச்சியில்
இருந்து விடுமுறைக்கு சென்னையை சுற்றி பார்க்க வந்த அமலா தெரிவித்தார்.
மேலும், பேப்பர் போடும் தொழில் செய்யும் முதியவரான கேசவன், இந்த அதிகப்படியான
வெயில் உடலுக்கு சோர்வை அளிப்பதாகவும், சிறு வயதில் இருந்தே சைக்கிள் பயணம்
செய்தது தான் தற்போது உடல் பலத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், உணவு டெலிவரி வேலையில் மூன்றாண்டுகளாக இருக்கும் சிவராஜ் கடந்த
மூன்று நாட்களாக தான் அளவுக்கு அதிகமான வெயிலை உணர முடிகிறது என்றும் வெயில் எவ்வளவு அதிகம் இருந்தாலும் தன் வேலைக்கு மதிய உணவு நேரமாக இருக்க கூடிய இந்த மதிய வேலை தான் சரியாக இருக்கும் அதனால் தேவைக்காக வேலை செய்தாக வேண்டும், மேலும் உணவு ஆர்டர்களில் ஜுஸ் இலவசம் அளிக்கும் உணவுகள் ஆர்டர் வருகிறது என்றார்.
10 ஆண்டுகளில் தான் பார்க்காத வெயில் இது என்றும் இத்தனை ஆண்டுகளாக ஆட்டோ
ஓட்டும் தொழிலில் இருந்தும் வெயிலால் மர நிழலில் ஒதுங்கி நின்றதில்லை, அதிலும்
சென்னையில் ஒரு சில இடங்களில் தான் இப்படி மர நிழல் கூட உள்ளது அதிக மரங்களை
அழித்தது கூட இத்தனை வெப்பத்திற்கு காரணமாக இருக்கலாம். அது மட்டுமின்றி பொது
மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது என்றும் தெரிவித்தார் ஆட்டோ ஓட்டுனர்
இளையராஜா. மேலும் வெயிலை சமாளிக்க எடுத்துக் கொள்ளும் மோர், ஜுஸ்
போன்றவற்றுக்கு ஆகும் செலவு சேர்த்து பார்க்கும் போது தேவையான அளவை விட
குறைவாகவே சம்பாதிக்க முடிவதாக வருந்தினார்.
அது மட்டுமின்றி, ஒரு நாளைக்கு நான்கு முறை குளிக்க வேண்டி உள்ளது, உடைகளை
மாற்றி கொண்டே இருக்க தோன்றுகிறது, வெயிலின் தாக்கம் அந்த அளவுக்கு உள்ளது,
தயிர் சாதம் தவிர வேறு உணவை எடுத்துக் கொள்ள தோன்றுவதில்லை என்று இஸ்திரி
தொழில் செய்யும் அமீர் தெரிவித்தார்.







