ஜி-7 அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி உலகத் தலைவர்களை சந்தித்துள்ளார்.
ஜப்பான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் கூட்டமைப்பான ‘ஜி-7 ‘ அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு மே 19-ந் தேதி முதல் தொடங்கி மே 21ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்று வருகிறது. ஜப்பான் தலைமையேற்றுள்ள இந்த மாநாடு ஹிரோஷிமாவில் நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேனுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு, உக்ரேன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். ரஷ்யா -உக்ரைன் போர் நடைபெற்று இரண்டு தரப்பிலும் சேதங்கள் நிகழ்ந்த நிலையில் இந்த மாநாட்டின் தொடக்கத்தில் உக்ரைன் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உட்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்தித்து இருவரும் ஆரத் தழுவிக் கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஜப்பானில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது உக்ரைன் பிரதமர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக் கொண்டனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.. ‘‘ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வரும் வேளையில் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடனான சந்திப்பின் மூலம் இந்தியா-ஜப்பான் உறவு வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.







