தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நேற்று 12 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 103.1 டிகிரி பாரன்ஹீட், கடலூரில் 100.4 டிகிரி பாரன்ஹீட், ஈரோட்டில் 102.56 டிகிரி பாரன்ஹீட், கரூரில் 103.1 டிகிரி பாரன்ஹீட், மதுரை நகர்புறத்தில் 101.48 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையம் பகுதியில் 102.2 டிகிரி பாரன்ஹீட், சேலம் 100.58 டிகிரி பாரன்ஹீட், திருப்பத்தூரில் 102.2 டிகிரி பாரன்ஹீட், திருச்சியில் 101.66 டிகிரி பாரன்ஹீட் மற்றும் திருத்தணி 101.12 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் வளிமண்டலத்தில் காற்று சுழற்சி நிலவுவதால், அடுத்த 2 நாட்களுக்கு, வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.