விவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 12 ஆவது நாளாக தொடரும் நிலையில் அவர்கள் அழைப்புவிடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்…

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 12 ஆவது நாளாக தொடரும் நிலையில் அவர்கள் அழைப்புவிடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பேரணியை பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 12 நாட்களுக்கு முன்பு தொடங்கினர். நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசின் சார்பில் இதுவரை 5 கட்டங்களாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியோடு இருப்பதால் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

6வது கட்டமாக மீண்டும் வரும் புதன் கிழமை விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளும் டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே நாளை நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு எதிர்கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ், இடது சாரி கட்சிகள், தி.மு.க., ஆர்.ஜே.டி., சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply