இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தேனின் தரத்தை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு செய்தது.
இதற்காக 13 பிராண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 3 பிராண்டுகளில் மட்டுமே தேனின் தரம் சிறப்பாக இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற 10 பிராண்டுகளில் தேனுடன் சுகர் சிரப் அதிக அளவில் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் சிலவற்றில் சுகர் சிரப் மட்டுமே பயன்படுத்தி தேன் என விற்பனை செய்து வந்துள்ளனர்.
தேனின் தரத்தை அறிந்து கொள்வதற்காக இரண்டு கட்டமாக பரிசோதனை நடந்துள்ளது. முதல்கட்ட சோதனை குஜராத்திலும், இரண்டாம் கட்ட சோதனை ஜெர்மனியிலும் நடந்துள்ளது. குறிப்பாக தேனில் கலப்படம் நடந்துள்ளதை கண்டுபிடிக்கவே சிரமமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சீனாவில் இருந்தே இந்த சுகர் சிரப் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரிசி, சோளம், பீட்ரூட், கரும்பு ஆகியற்றில் இருந்து தேன் கலப்படத்திற்கு தேவையான சுகர் சிரப் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சீன இறக்குமதிக்கு படிப்படியாக தடை விதிக்கப்பட்டு வருவதால் உள்நாட்டிலேயே சுகர் சிரப் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே பெரும்பாலான மக்கள் தேனை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இதுபோன்ற கலப்பட தேனால் உடல்நலத்திற்கு எந்த பலனும் இருக்காது என தெரிவித்துள்ளனர். இந்த தேனில் சர்க்கரை அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு பல்வேறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேன்களுக்கு பரிசோதனை செய்வது கட்டாயம் என மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்தது.
அதேபோல் தேன் தயாரிக்கும் நிறுவனங்களில் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் FSSAI உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று சுகர் சிரப்பை பயன்படுத்துவதால் தேன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையும் எழுந்துள்ளது.







