திருச்செந்தூரில் இன்று நிறைவு பெறும் பாஜகவின் வேல் யாத்திரை நிழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொள்கிறார்.
தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நவம்பர் 6-ஆம் தேதி திருத்தணியில் தொடங்கியது. முருகனின் அறுபடை வீடுகள் வாயிலாக சென்று வேல் யாத்திரை திருச்செந்தூரில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டது. நிவர் புயல் காரணமாக சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நடக்க இருந்த வேல் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து யாத்திரையில் கொண்டு வந்த 3 அடி நீளம் கொண்ட ஐம்பொன்னால் ஆன வேலினை கோவில் உண்டியலில் செலுத்தினார். அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். மற்றும் பாஜகவின் தேசிய மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். வேல் யாத்திரை நிகழ்ச்சியை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்
2200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







