பாகிஸ்தானில் வறுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தனது 5 குழந்தைகளை நபர் ஒருவர் கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். வேலையின்மை காரணமாக அந்த நபருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்று மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரமடைந்த அந்த நபர் தனது ஐந்து குழந்தைகளையும் பாகிஸ்தானின் பட்டோகியில் உள்ள ஜம்பர் கால்வாயில் தூக்கி வீசியுள்ளார்.
இது தொடர்பாக தகவலிறிந்து வந்த காவல்துறையினர் கால்வாயில் விழுந்த குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் அவரது 1 வயது மற்றும் நான்கு வயது மகள்களில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று குழந்தைகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வறுமை காரணமாக தந்தையே தனது 5 குழந்தைகளையும் கால்வாயில் தூக்கி வீசியுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







