வங்கியில் பெற்ற கடனை ஏமாற்றுவதற்காக, தங்களிடம் பணியாற்றி நபரை கொலை செய்து, நாடகமாடிய நான்கு பேரை தருமபுரி போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்குமார். இவர் தனது தந்தையிடம் பணியாற்றி வந்த சுரேஷ்குமாரின் பெயரில் வங்கியில் கடன்பெற்று 6 லாரிகளை புதிதாக வாங்கியுள்ளார். சுரேஷ்குமார் மூலம் வாங்கிய லாரிகளின் கடனை கட்டாமல் ஏமாற்றுவதற்காக அருள்குமார், தனது நண்பர்களான எல்லப்பராஜ், கோவிந்தராஜ், கார்த்தி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சுரேஷ்குமாரை கொல்ல சதிதீட்டம் தீட்டியுள்ளார்.
இதனையடுத்து வழக்கம்போல் சுரேஷ்குமாரை தங்களுடன் அழைத்து சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர் போதையிலிருந்த அவரை அதியமான் கோட்டை வழியாக செல்லும்போது காரிலிருந்து கீழே தள்ளி, அவர் மீது மினிலாரியை ஏற்றி கொன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீஸார், வங்கி கடனை கட்டாமல் ஏமாற்றுவதற்காக சுரேஷ்குமாரை அருள்குமார் உள்ளிட்ட 4 பேர் கொலை செய்து விட்டு நாடகம் ஆடியதை கண்டுபிடித்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







