கொற்கை அகழாய்வின் மற்றொரு மைல்கல்லாக, ரோம் நகருடன் வணிக தொடர்பு இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து ஆறு மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணி இந்த மாத இறுதியில் நிறைவு பெற உள்ளது. இந்த அகழாய்வு பணியில் ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக சுடுமண்ணால் செய்யப்பட்ட 9 அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு, சங்கறுக்கும் தொழில் கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள், வெளிநாடுகளுடன் கடல் சார்ந்த வாணிபத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள், 4 அடி உயரம் கொண்ட இரண்டு அடுக்கு கொள்கலன் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வில் ரோம் நகரத்துடன் வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் விதமாக அந்நாட்டில் எண்ணெய் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ஜாடியின் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து உலகத்தில் பல்வேறு நாடுகளுடன் கொற்கையில் இருந்து வாணிபத் தொடர்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருநை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என்று கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் அறிவித்ததை அடுத்து தற்போது அகழாய்வு பணியில் கிடைத்து வரும் பொருட்கள் தமிழனின் பெருமையையும், வரலாற்றையும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.







