ராமநவமி உற்சவத்தையொட்டி, வடமாநிலங்களில் நள்ளிரவு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது.
ராம நவமி உற்சவத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள் . நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களைப் பின்பற்ற ராமரின் வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராமர் காட்டிய வழியைப் பின்பற்றி, சிறந்த தேசத்தைக் கட்டமைக்க உறுதி ஏற்போம்” என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ராமநவமி உற்சவத்தையொட்டி, “ஷோபா யாத்ரா” நடைபெற்றது. இதில் விடிய,விடிய நடைபெற்ற கொண்டாட்டங்களில் அப்பகுதி மக்கள் ராமயாண நாடகங்களை கண்டு களித்தும், மேள தாளம் முழங்க நடனமாடியும் மகிழ்ந்தனர். ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் ராமநவமியை போற்றும் வகையில் மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அயோத்தி ராம் மந்திரை த்ரூபமாக மணற்சிற்பத்தில் வடிவமைத்து இருந்தது பார்வையாளர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.








