மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல்லுயிர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு என அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் 7 மலைகளை உள்ளடக்கிய பல்லுயிர் வாழும் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் கூகைமலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வரலாற்று கதையாக உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட படப்பிடிப்பின் போது வெடி விபத்து போன்ற காட்சிகள் உருவாக்கபட்டுள்ளது; இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக கூறி வனத்துறையினரால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது, பின் நீதிமன்றத்தின் உரிய அனுமதியுடனும், கட்டுபாடுகளுடன் படப்பிடிப்பு மீண்டும் தொடரப்பட்டது .
இந்நிலையில் மதுரை அரிட்டாப்பட்டியில் அதிக ஒலி எழுப்பும் கருவிகளைக் கொண்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதால் மலையில் உள்ள பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மீதமிருக்கும் பறவைகளை காப்பாற்ற உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.







