மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது – திருமாவளவன்

மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த…

மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது
அரசியல் உள்நோக்கம் கொண்டது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த விவரங்களை வழங்குவதற்கு அரசு செயலாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் செய்திருந்த அறிவிப்பு அரசியல் சர்ச்சையாக மாறியது. உடனே தலைமைச்செயலாளர் , ‘இது வழக்கமான நடைமுறைதான்; ஆனால், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது” என்று விளக்கம் அளித்தார். எனவே, ஆட்சிநிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு ஏதுமில்லை என்று கருதினோம். ஆனால், தற்போது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் ஆகியோரை ஆளுநர் அக்டோபர் 30ம் தேதி அழைத்துப் பேச இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகவே தெரிகிறது என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் சில விவரங்களை மாநில அரசிடம் கேட்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் கேட்கும் விவரங்களை அளிக்க வேண்டிய பொறுப்பு அம்மாநிலத்தின் முதலமைச்சருக்குத்தான் உள்ளது. நேரடியாக அரசு செயலாளர்களை ஆளுநர் அழைத்துப் பேசுவது மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவே பொருள்படும். இதற்கு அரசியலமைப்புச் சட்டம் எந்த அனுமதியும் வழங்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த அறிக்கையில், இவருக்கு முன்பிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்னரே அவர் அந்த நடைமுறையை நிறுத்திக்கொண்டார். புதிதாக வந்திருக்கும் ஆளுநர் ஆர். என்.ரவி தற்போது அதே வழியைப் பின்பற்றுவது அரசியல் உள்நோக்கத்தோடு அவர் செயல்படுகிறாரோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. இந்த நடைமுறையை ஆளுநர் கைவிட வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.