முகநூலில் ட்ரெண்டாகும் உயிரிழப்பு குறித்த விழிப்புணர்வு பதிவு.

கும்பகோணத்தை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர் மணிகண்டன் (28) கடன் தொல்லையால் சில தினங்களாக மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று உயிரிழப்பு கொண்டுள்ளார், மேலும்உயிரிழப்பு  செய்வதற்கு முன் முகநூலில் நேரலை(Live)செய்துள்ளார். அந்த வீடியோவை…

கும்பகோணத்தை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர் மணிகண்டன் (28) கடன் தொல்லையால் சில தினங்களாக மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று உயிரிழப்பு கொண்டுள்ளார், மேலும்உயிரிழப்பு  செய்வதற்கு முன் முகநூலில் நேரலை(Live)செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த அவரது நண்பர் ‘அஜிதன் சந்திரஜோதி’ முகநூலில் உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள் என்று உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னுடைய நண்பருக்கு அவர் மனைவிக்கும் மனகசப்பு, கடன் தொல்லைகளின் காரணமாகவும் முகநூல் நேரலையில் பலபேர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக்  கொண்டார். அந்த பதிவை பார்த்ததும் அவ்வளவு பெரிய வலி; வருத்தத்தில் மனம் உடைந்துபோனேன். தொடர்ந்து நானும் அவரை காப்பாற்ற என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்துபார்த்தேன். ஆனால், அது எவ்வித பலனும் கிடைக்கவில்லை. அவர் என்னைவிடவும் ஒருசில வயது இளமையானவர். அவர் ஒரு பெரிய சிலம்பம் (மாஸ்டர்) வீரரும் கூட, அவர் வாழ்ந்த காலத்தில் மிகப்பெரிய ஒரு தற்காப்புகலை குழுவையே உருவாக்கினார். தேசிய அளவில் பல சாதனைகளையும், பதக்கங்களையும் பெற்றவர். மிகப்பெரிய மேடைகளில் தனது சிறந்த கலையை நிரூபித்தவர். உண்மையில், மிகப்பெரிய உழைப்பாளி. எனக்கு தெரிந்து நல்லெண்ணம் கொண்ட நேர்மையான மனிதர். ஆனால், இன்று அவர் என் கண்முன்னே (நேரலையில்) துடி துடிக்க இறந்துபோனார்.

இந்த செய்தியின் வழியாக நான் பல செய்திகளை உங்களிடம் கண்ணீரோடு சொல்ல விரும்புகிறேன்.

1) மன அழுத்தம் உங்களை கொல்லும்:

மிகவும் கவனம். மன அழுத்தத்தை உங்களுக்குள் சேகரித்துவைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் மன அழுத்தத்திற்கு தீனியாகிவிடாதீர்கள். அதேபோல், உங்களால் யார் ஒருவரும் மன அழுத்தத்தில் பாதிக்கும் அளவிற்கு செய்துவிடாதீர்கள். பெயர், காசு, பணம், புகழ், திறமை, இவை எதுவும் உங்களை மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றாது. உங்களை காயப்படுத்தும் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் உங்கள் மன திடத்தை இழந்துவிடாதீர்கள்.
‘மணபலம் மற்ற அனைத்து பலத்தைவிடவும் பெரியது! உயிர் காப்பது’.
உங்களுக்கோ மற்றவருக்கோ மனஅழுத்தம் விதைக்கும், எந்தவித வேலையையும் தொடராதீர்கள். மனஅழுத்தம் தரும் உறவு, வேலை, எதுவானாலும் அது எவ்வளவு பெரிய பணியாக இருந்தாலும் யோசிக்காமல் அதனைத் தூக்கி போடுங்கள். காதலோ, நட்போ, குடும்பமோ எதுவாயினும் – அந்த வகை அழுத்தத்தை அதை உங்களிடமிருந்து நகர்த்தி வையுங்கள் அதுவே முதன்மை.

2) தனிமை உங்களை கொல்லும்:

எப்போதும் தனிமையை விரும்பாதீர்கள். உங்களுக்கு தெரிந்து யாரையும் தனிமையில் வாழ அனுமதிக்காதீர்கள் / இடம்தராதீர்கள். அதிலும், மன குழப்பத்தில் இருக்கும்போது ஒருபோதும், தனிமையை விரும்பாதீர்கள். தனிமை என்பது கண்ணாடி போல உங்கள் உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்தும். அதை அதிகப்படுத்தும். நீங்கள் கோபத்திலிருந்தால் கோவமாகவும், மகிழ்ச்சியில் இருந்தால் மகிழ்ச்சியாகவும், குழப்பத்தில் இருந்தால் குழப்பமாகவும், வன்மத்தில் இருந்தால் வன்மமாகவும் – தனிமை இந்த உலகை உங்களுக்கு காட்டும். பெரும்பாலும் தனிமையில் இருக்கும்போது நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறானதாகவே அமையலாம்.

3) கடன் நம்மை கொல்லும்:

கடன் நம்மை, நம் நிம்மதியை, நம் தூக்கத்தை, நம் குடும்பத்தின் நிம்மதியை கொல்லும். சிக்கனத்தை முதன்மைப் படுத்துங்கள். உலகத்துக்காக நாகரீக வாழ்க்கை வாழ்கிறேன் என்று எண்ணி உங்கள் பொன்னான பணத்தை வீண் விரயம் செய்து பிறகு கடனில் தவித்து மீளமுடியாமல் இருந்துவிடாதீர்கள். வாழ பணம் அவசியம்தான். ஆனால், பணமே வாழ்க்கை கிடையாது.

5) உங்களின் கோவமே உங்களின் மரணம்:

ஒவ்வொருமுறை நீங்கள் கோபப்படும்போதும் ஏதோ ஒன்றை இழந்துகொண்டும், ஏதோ ஒன்றுடன் தோற்றுக்கொண்டும் வாழ்கிறீர்கள் என்பதனை மறக்காதீர்கள். கோபம் என்பது உங்கள் மிருகத்தனத்தின் எச்சம் என்பதனையும் மறவாதீர்கள். பதட்டமான சூழலில், சிக்கலான சூழலில் எவ்வாறு ஒருவர் தனது கோபத்தை கட்டுப்படுத்துகிறார் என்பதே, அவரின் பக்குவத்தை காட்டும். மன்னிக்க முடியாத தவறு என்று இங்கு எதுவும் இல்லை. கோபம் வரும் சூழலில் உங்கள் மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள் இது உங்கள் நிதானத்தையும் மனிதநேயத்தையும் உளவியல் புரிதல் உணர்வையும் – இயற்கை சோதிக்கும் நேரம் இது என்று. நீங்கள் கோபத்தை கைவிடும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் மென்மையடைகிறீர்கள் என்று பொருள். உங்களை பலமற்றவர், பயந்தாங்கோலி என்று சிலர் சிரிக்கலாம். ஆனால், மறக்காதீர்கள் இவ்வுலகம் மகாத்மா காந்தியை, மண்டேலாவை, அன்னை தெரேசாவை நியாபகம் வைத்திருக்கிறது. ஹிட்லரையோ, முசோலினியையோ ஏன் நேதாஜியையோ கூட அல்ல.

6) அன்பை விதையுங்கள்:

யார் ஒருவரை பார்த்தாலும் அவர்களோடு அன்புடன் பழகுங்கள். போட்டி பொறாமை என்று புகளுக்காகவும், பணத்திற்காகவும், பதவிக்காகவும், கைதட்டலுக்காகவும் சிக்கி சின்னாபின்னமானோர் கோடி! நீங்கள் குழந்தையாக பிறந்தீர்கள், இப்போதும் நீங்கள் வளர்ந்த குழந்தையே என்பதை மனதில் வையுங்கள். நாம் ஒரு பெரிய அப்பாட்டக்கர் என்ற வெறி பிடித்த மனநிலையிலிருந்து ஒதுங்கி இருங்கள். உங்களுக்கு தொல்லைகொடுக்கும் மற்றவரும் வளர்ந்த குழந்தையே! அவர்கள் வளர்ந்த முறையால் அவர்கள் செய்யும் தவறுகளால் நீங்கள் அவர்களை வெறுக்காமல் கூடியவரை அவர்களை சரிசெய்ய முயலுங்கள். இல்லையேல் குறைந்தபட்சம் அவர்கள்மீது காழ்புணர்ச்சி வராமலாவது உங்களை பண்படுத்திக்கொள்ளுங்கள்.

7) உங்களை யாருக்காகவும் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை:

இங்கே யாருக்காகவும் நம்மை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையில் சாதனை என்பது நாம் எவ்வளவு மனநிம்மதியுடன் வாழ்ந்தோம், நம்மால் எத்தனைபேர் மனநிம்மதியுடன் வாழ்ந்தார்கள் என்ற கணக்கே ஒழிய – எவ்வளவு புகழோடு / அதிகாரத்தோடு / பணத்தோடு வாழ்ந்தோம் என்பதல்ல. ‘வாழ்க்கையை இரசித்து, ருசித்து வாழுங்கள்’ அவ்வளவே.

8) நல்ல நட்பும் – நீடித்த தொடர்பும்:

நல்ல நண்பர்களை தேடித்தேடி உருவாக்கிக்கொள்ளுங்கள்! அவர்களோடு நீடித்த
உரையாடலை கடைபிடியுங்கள். எந்தச் சூழலிலும் நல்லநண்பர்களோடு பேசுவதை, நேரம்களிப்பதை கைவிடாதீர்கள். நல்லதோ கெட்டதோ அவர்களோடு கலந்து பேசுங்கள். யார் போனில் அழைத்தாலும் அதை எடுத்து பேசுங்கள். யாருக்கேனும் ஒருவருக்காவது நீங்கள் நம்பிக்கையாக இருப்பீர்கள்.

9) வாழ்க்கையை கொஞ்சமேனும் ரசித்து வாழுங்கள்:

நீங்கள் இயந்திரங்கள் அல்ல. நன்றாக வாழவேண்டிய மனிதர்கள். மறக்காதீர்கள் உங்கள் உடல், உடலுக்குள் செல்லும் காற்று, காற்று மோதும் மரம், மண், மலை, வானம், அருவி, என நீங்கள் பார்க்கும் அனைத்தும் குறிப்பிட்ட காலம் மட்டுமே உங்களால் அனுபவிக்க முடியும். இறந்தபின் ஊட்டியின் குளிரையோ, ஒகேனக்கல் அருவியையோ, கடற்கரையின் காலை வெதுவெதுப்பையோ எதையும் நீங்கள் அனுபவிக்க முடியாது. ஆகவே, வாழ்க்கையை நன்றாக இரசித்து வாழபழகுங்கள்.

10) மனிதர்களின் உணர்வுகளை மதியுங்கள்:

மற்றவர்களின் நட்போ, காதலோ, எதுவானாலும் அதை மதியுங்கள். உணருங்கள். இங்கே, யாரும் யாருக்கும் சொந்தம் இல்லை. ஒருவருடைய உணர்வுகளை தூக்கிபோடுவதை விட கொடுமை கொலை வேறு ஒன்றுமில்லை.

11) தவறுகளை தாராளமாக மன்னியுங்கள்:

பெரியவரோ, இளைஞரோ, சிறுவரோ, உறவிஞர்களோ யார் என்ன தவறு செய்தாலும் அதை உணர்ச்சிவசப்பட்டு அணுகாமல் அறிவுவயப்பட்டு அணுக முயலுங்கள். பெரும்பாலும் மன்னித்துவிட முயலுங்கள். ஏனெனில் தவறுகள் செய்யாத மனிதர்களே இல்லை. மன்னிப்பு உங்களை மனிதநேயமிக்க மனிதராக உயர்த்தும். ஒரு தவறு நடந்தால் அந்த தவறின் உளவியல் சிக்கலை உணர்ந்து அதை மதிப்பீடு செய்யுங்கள். இவ்வுலகம் மிகவும் அழகானது. ஆனால், இயற்கை உங்களுக்கு கொடுத்திருக்கும் நாட்கள் மிகவும் குறைவு. அதை ஆரோக்கியத்துடன் ரசித்து ரசித்து வாழ பழகுங்கள். எதுவாக இருந்தாலும், அவைகள் மற்றவர்களுக்கு பாதிப்பில்லாமல் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் என்றால் அதை யார் தடுத்தாலும் அந்த வாழ்க்கையை வாழ்ந்துவிடுங்கள்.
பெற்றோர், குழந்தைகள் வாழ்க்கையில் எந்த சிக்கல் வந்தாலும், இழப்பு பெரியதல்ல என்று வாழ, பழகச் சொல்லிக்கொடுங்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் செய்வதைப்போல் எதற்கெடுத்தாலும் அவர்கள் வாழ்க்கையே போய்விடும் போய்விடும் என்று பயப்படுத்தி அவர்களை தினமும் கொல்லாதீர்கள். அவர்கள் உயிரை விட இங்கே தேர்வோ, வேலைவாய்போ எதுவும் பெரிதல்ல.

ஒரு சிரிப்பு, ஒரு முத்தம், ஒரு கட்டியணைப்பு, ஒரு கைக்குழுக்கள், ஒரு அலைபேசி அழைப்பு, ஒரு சந்திப்பு என இங்கே – பல உயிரிழப்புகளை தடுக்கலாம். Whats app-ல் தனிமை என யாரேனும் ஸ்டேட்டஸ் பதிவிட்டாலும் அலைபேசியில் தொடர்புக்கொண்டு உரிமையோடு பேசுங்கள், திட்டுங்கள். அவர்களுக்கு நீங்கள் இருப்பதாக அவர்களை தேற்றுங்கள் நம்பிக்கை விதையுங்கள். ஒரு உயிரை காப்பதை விடவும் இங்கே எதுவும் பெரியது அல்ல. உங்களை சுற்றியிருங்கும் உலகத்தையும், மனிதர்களையும் கவனியுங்கள். உங்களால், அவர்களுக்கு என்ன நன்மை செய்யமுடியுமோ அதை செய்யுங்கள், தொடர்ந்து செய்யுங்கள். பிறகு நீங்கள்தான் அவர்களின் “கடவுள்”.

மன அழுத்தமும் தனிமையும் உயிரை கொல்லும்… ஜாக்கிரதை…ஜாக்கிரதை!

இந்த பதிவு தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.