திண்டுக்கல்லில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் மற்றும் அவரது தங்கை உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் 41 வயதான ஆரோக்கிய ஜெரால்டு. இவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் தேனி மாவட்டம் கழிச்சி பட்டியை சேர்ந்த வனிதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று, கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆரோக்கிய ஜெரால்டு வனிதா அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்தார். இதில் வனிதா மயங்கி விழுந்தார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத ஆரோக்கிய ஜெரால்டு கத்தரிக்கோலால் வனிதாவை சரமாரியாக குத்தினார். அதில் படுகாயமடைந்த வனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கிய ஜெரால்டு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது தங்கை ஃப்ளோரா மேரி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.







