பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 31 பேர் கொண்ட குழுவில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருப்பதாக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் மோடி, ஊட்டசத்து குறைபாட்டில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்காக அவர்களின் திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் வகையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவை ஆய்வு செய்ய, 31 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்த குழுவின் தலைவராக பாஜகவை சேர்ந்த வினய் சஹஸ்ரபுத்தி உள்ளார். அந்த 31 பேரில் 1 மட்டுமே பெண் எம்.பி ஆவார். பெண்களின் வாழ்வை குறித்த முக்கிய மசோதா ஆய்வில் ஒரே ஒரு பெண் எம்.பி மட்டுமே இருப்பதாக பலரும் குற்றம் சாட்டிவரும் இந்நிலையில் தி.மு.க. எம்.பி கனிமொழியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டில், 110 பெண் எம்.பி.க்கள் உள்ளோம்; ஆனால், பெண்ணுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30 பேர் ஆண்கள்; பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர், பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர்” என எம்.பி கனிமொழி ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/KanimozhiDMK/status/1477917250313093122
இந்த ஆய்வு குழுவில் நிறைய பெண் எம்.பிக்கள் இருந்திருக்கலாம் என திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுஷ்மிதா தேவ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.







