புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி!

புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள்…

புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கனமழையால் பாதித்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில், வீடு வீடாக சென்று உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேவைக்கு ஏற்ப நடமாடும் உணவகங்கள் அமைத்து சூடான உணவு வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

புரெவி புயல் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களையும் நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply