பட்டியலின குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது, எனக் கடைக்காரர் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 5 பேர் சாக்லேட் வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றுள்ளனர். ஆனால் கடைக்காரர் திண்பண்டங்கள் வழங்க முடியாது என அந்த மாணவர்களை திருப்பி அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாணவர்கள் கடைக்காரரிடம் சாக்லெட் கேட்கும் போது, கடைக்காரர் ஊரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றார். என்ன கட்டுப்பாடு என்று சிறுவன் கேட்கையில், ஊரில் கூட்டம் போட்டு பேசப்பட்டுள்ளது. பட்டியலின மாணவர்களுக்கு கொடுக்க கூடாது. யாரும் இனிமே கடையில் வந்து திண்பண்டம் வாங்க வர வேண்டாம், திரும்பி செல்லுங்கள் என்றார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில், குறிப்பிட்ட கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐஜி அஸ்ராக் கார்க் உறுதியளித்துள்ளார். அத்துடன், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன்தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஐஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று 2 பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.







