தொடர் மழையால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

நாகை அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 200 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழையினால் வயலிலேயே சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட சூழலில்…

நாகை அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 200 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழையினால் வயலிலேயே சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட சூழலில் போதிய காவிரி நீர் கிடைக்காததால் நீரின்றி சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் கருகி நாசமானது.

இந்நிலையில் எஞ்சிய பயிர்களை விவசாயிகள் டீசல் என்ஜின் கொண்டு நீர் இறைத்து
காப்பாற்றிய சூழலில் ஒருசில இடங்களில் அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று
வருகிறது.

இந்நிலையில் கீழ்வேளூர் பட்டமங்கலம், கிள்ளுக்குடி, சாட்டிக்குடி, கொடியாலத்தூர், இளையான்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 200 ஏக்கர்
அளவிலான விளை நிலங்களில் நெல்மணிகள் வயலிலே சாய்ந்துள்ளது.

பள்ளமான ஒரு சில வயல்களில் மழை நீர் தேங்கி நெல்மணிகளைச் சூழ்ந்துள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பல்வேறு சிரமங்களைச் சந்தித்து நெல்மணிகளை விளைவித்த விவசாயிகள் மழையினால் ஏற்பட்ட பாதிப்பால் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.