சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடம் தி.நகர் அபிபுல்லா சாலையில் கட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விஷால் – ஐசரி கணேஷ் என இரண்டு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் கட்டிடப் பணிகள் நிறைவடையாமல் பாதியில் நிற்கிறது. இதன் காரணமாக தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழக அரசு சார்பில் சிறப்பு அதிகாரி கீதா கவனித்து வருகிறார். நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகளுக்கு எதிரிலேயே, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை திடீரென அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் சிறப்பு சிறப்பு அதிகாரி கீதா அறையில் உள்ள கோப்புகள் தீயினால் சேதமடைந்ததாக தகவல் வெளியானது. பின்னர் இது குறித்து விளக்கமளித்த சிறப்பு அதிகாரி கீதா, நடிகர் சங்கம் தொடர்பான எந்த கோப்புகளும் தீ விபத்தில் பாதிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது என்றும் கம்ப்யூட்டர் மற்றும் சில நீதிமன்ற கோப்புகள் தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







