கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்து வருகின்றனர். அதனால் Zoom வீடியோ கால் வழியாக அனைவரும் இணைந்து பணியாற்றுகின்றனர். கடந்த சில மாதங்களாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் Zoom ஒன்றாக இருக்கிறது.
Zoom மீட்டிங்கை அடிப்படையாக வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் Zoom background எப்படி இருக்க வேண்டும் என்பதில் பெண்களை விட ஆண்களே அதிக கவனம் செலுத்துவதாக தெரியவந்துள்ளது. வீடியோ காலில் இருக்கும் போது தங்களுக்கு பின்புறத்தில் என்ன இருக்க வேண்டும் என ஆண்கள் யோசித்து முடிவு செய்வதாக கூறப்படுகிறது. அதாவது திரைகள், பல்கலைக்கழக புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் மீட்டிங் நடக்கும் போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி டிசைன்களையும் மாற்றுகிறார்கள். இது அவர்களது தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பெரும்பாலும் Zoom வீடியோ காலில் தங்கள் முகத்தை காட்டுவதை விரும்புவதில்லை என கூறப்பட்டுள்ளது. இதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த அழைப்பில் ஆண்கள் நிறைய பேர் இருந்தால் பெண்கள் வீடியோ ஆப்ஷனை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் தோற்றம் தொடர்பான காரணங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல் அவர்கள் வீட்டில் மற்ற வேலையும் பார்க்க வேண்டிய சூழல் வருவதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.







