சென்னை சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஜரூர் தாலுக்காவை சேர்ந்த 24 வயதான வேலுச்சாமி. இவர் சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், எம்எல்ஏக்கள் பலர், வாலாஜா சாலையில் உள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளியில் தங்கியுள்ளனர். அங்கு, காவலர் வேலுச்சாமிக்கு பாதுகாப்புப்பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு 8.15 மணியளவில், கையில் வைத்திருந்த துப்பாக்கியால், தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு ஓடி வந்த சக காவலர்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வேலுச்சாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







