தமிழ்நாடு பட்ஜெட் – தலைவர்கள் கருத்து!

தமிழ்நாடு  பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை தற்போது பார்க்கலாம்…. முன்னேற்றப் பாதையில் தமிழ்நாடு – வைகோ மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கையில், மத்திய…

தமிழ்நாடு  பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை தற்போது பார்க்கலாம்….

முன்னேற்றப் பாதையில் தமிழ்நாடு – வைகோ

மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசைக் காட்டிலும், நிதி பற்றாக்குறையைக் குறைத்திருப்பது திமுக அரசின் திறன்மிக்க நிதி மேலாண்மைக்குச் சான்று என குறிப்பிட்டுள்ளார்.  இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் பீடு நடை போடுவதை இந்த நிதி நிலை அறிக்கை உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

வரவேற்பும்… ஏமாற்றமும்…

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவு விரிவாக்கத் திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டம் ஆகியவை வரவேற்கத்தக்கவை.

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.77,000 கோடியில் 14,500 மெகாவாட் நீரேற்று மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

தகுதியை சேர்த்தது ஏன்?

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் தகுதியான பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது; தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதியை உள்ளே சேர்த்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது!

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் புரட்சிகரமான திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.