தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், நீர்ப்பாசன மேலாண்மையும் மேம்படுத்தப்படும் என டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வாயிலாக தென்னிந்தியாவில் வெட்டுக்கிளியின் தாக்குதல் தடுக்கப்பட்டது” என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராகவும், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் உள்ள டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், ‘தற்சார்பு இந்தியாவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த வலைதளக் கருத்தரங்கில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.







