தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்ததால் 8 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை வகுப்புகளும் இன்றுமுதல் செயல்படுகின்றன.
கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள், வேளாண், கால்நடை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு வகுப்புகள் இன்று திறக்கப்படுகின்றன. கல்லூரி விடுதிகளும் இன்று திறக்கப்படுகின்றன. இது தவிர பிற மாணவர்களுக்கு தொடர்ந்து இணைய வழியே வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த ஆண்டு மருத்துவகல்லூரிகளில் சேர்ந்துள்ளவர்களுக்கான வகுப்புகள் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளன.
கல்லூரிகள், விடுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சுத்தம் செய்தல் போன்ற கொரோனா தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் உள்ள கல்லூரிகள், விடுதிகள் இன்று திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்படுள்ளது.







