ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் வாயிலாக செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் காணொலி காட்சி வழியே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, நாடு முழுவதும் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன் காரணமாக வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் எரிபொருள் மிச்சமாவதுடன், நேரமும் மிச்சமாகும் என்றும் நிதின்கட்கரி தெரிவித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கி ஒரு லட்சக்கணக்கான பாஸ்டேக்குகளை நான்கு வங்கிகள் வழங்கி உள்ளன. 2018 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 34 லட்சம் வாகனங்களுக்கு பாஸ்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பாக விற்கப்பட்ட பழைய வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







