சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு வழக்கில் பெண் உதவி இயக்குநர் உட்பட 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்ராவின் வழக்கில் நசரத்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் ஹேம்நாத்திடம் நான்காவது நாளாக போலீஸார் விசாரணை செய்தனர். ஹேமந்தின் தந்தை ரவிசந்திரனிடமும் விசாரணை செய்துள்ளனர். இதையடுத்து அடுத்த கட்டமாக சித்ராவுடன் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக நடிகர்களிடம் சித்ரா எவ்வாறு நடந்து கொண்டார் என்று இசை நிகழ்ச்சியின் உதவி இயக்குநர் அனிதா உள்பட 4 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார். நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி அவர் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.







