நாளை மறுநாள் சென்னை வரவுள்ள சசிகலாவை வரவேற்க பேரணி நடத்த அனுமதி கேட்டு அமமுகவினர் மனு அளித்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த ஜனவரி 27ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அதற்கு முன்னதாக ஜனவரி 20ம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பின் கொரோனாவில் குணமடைந்த அவர், கடந்த 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சசிகலா பெங்களூரிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
வரும் 8ம் தேதி சசிகலா தமிழகம் திரும்ப உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி அறிவித்திருந்தார். இந்நிலையில், நாளை மறுநாள் சென்னை வரும் சசிகலாவை வரவேற்கவும், பேரணி நடத்தவும் அனுமதி கோரி, பெருநகர காவல் ஆணையரிடம் அமமுகவின் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.







