சசிகலா விடுதலையாகி வந்து, தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மாங்காட்டில் தேமுதிகவின் செயல் வீரர்கள் மற்றும் பூத் முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தலை அதிமுகவும் திமுகவும் முதல்முறையாக சந்திக்கிறது எனக் கூறினார். மேலும், தேமுதிக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், விஜயகாந்த் அனுமதி அளித்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘ஒரு பெண் என்ற முறையில் சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவிற்காகவே வாழ்ந்தவர் சசிகலா, அவருக்கென என்று தனி வாழ்க்கை கிடையாது. அவர்களால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள். தற்போது அவரை வேண்டாம் என்று சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது. அவர் விடுதலையாகி வந்து தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என்று பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன்’ என தெரிவித்தார்.







