குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ வெளியான வழக்கில் கைதான தாய்க்கு மனநல பாதிப்பில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். கூலி தொழிலாளியான இவருக்கும், ஆந்திர மாநிலம், சித்தூர் அருகிலுள்ள ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே துளசிக்கும் சென்னையை சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்துகொண்ட வடிவழகன் தனது மனைவி துளசியை கண்டித்துள்ளார். இதுகுறித்து துளசியில் பிரேம்குமாரிடம் தெரிவித்துள்ளார். கணவன் மேல் ஏற்படும் ஆத்திரத்தை குழந்தை மீது காட்டு என பிரேம் குமார் கூற அதை அப்படியே கேட்டு அந்த குழந்தையை அடித்து அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோவை சில நாட்களுக்கு முன்னர் வடிவழகன் பார்த்துள்ளார். அத்துடன் இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். மேலும், அந்த வீடியோ சமூக வலைதளத்திலும் வைரலானது. அந்த பெண்ணை கைது செய்ய பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை ஆந்திராவில் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த துளசியை தனிப்படை போலீசார் கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர். மேலும், துளசி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் பிரேம் குமார் தூண்டுதலின் பேரில் குழந்தையை தாக்கியதை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து பிரேம்குமாரை கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ள நிலையில், துளசியை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவருக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை என மருத்துவர் பாரதி பிரதீப் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து தகுதி சான்றிதழ் பெறுவதற்காக துளசியை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். தகுதி சான்றிதழ் பெற்ற பின் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.







