வனவிலங்குகளை பாதுகாப்பதில் வனத்துறையினரின் பங்கு சிறப்பானது. காடுகளில் உள்ள விலங்குகளை அவ்வப்போது அழகாக படம்பிடித்து சமூக வலைதளங்களில் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இதுபோன்ற புகைப்படங்களுக்கு இணையத்தில் அதிக வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில் சிறுத்தை ஒன்றின் புகைப்படத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. கிர் பூங்காவின் முதல் பெண் காவலரான ரசிலா வதேரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பணியின் போது 1000-க்கும் மேற்பட்ட வன விலங்குகளை மீட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் வன விலங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை நினைத்து பெருமையாக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டியுள்ளார். சிறுத்தையின் புகைப்படம் மிகவும் அழகாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிலா வதேராவுக்கு தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.







