தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை மக்களுக்கு கிடைப்பதை தடுக்கும் நோக்கத்துடன் திமுகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்காக தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நாமக்கல் மாவட்டத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கினார். நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள ஆட்டையம்பட்டியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டையாகத் திகழ்வதாக தெரிவித்தார். ஏழை, எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான் என்றும் கூறினார். இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் எண்ணங்களை செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
மக்களுக்கு பொங்கல் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் கிடைப்பதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் குறித்து திமுகவினர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். நாமக்கல்லின் பல்வேறு இடங்களிலும் முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார். அப்போது ஆஞ்சநேயருக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.







